பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

பாமக சின்னம் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலாக, ராமதாஸ் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, பாமக அங்கீகாரம் ரத்து ஆனதற்கு அன்புமணியின் செயல்பாடுகளே காரணம் என்றும், தற்போது அவர் கட்சி உறுப்பினர் கூட இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பும் வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, உரிமையியல் நீதிமன்றம் விசாரணையை மார்ச் 13-க்கு ஒத்திவைத்திருந்தது.

இதற்கிடையில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்ததாகவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 10-க்கு ஒத்திவைத்தார்.