ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட டாங்கர் கப்பல் மும்பை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பின், அந்த வழியாக இந்தியாவை வந்தடைந்த முதல் கப்பல் இதுவென கூறப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் தொடங்கியதையடுத்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாகவும், இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகவும் செய்தி குறிப்பிடுகிறது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகலாம் என்ற அச்சமும் கூறப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், சவுதியிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் ஹார்முஸ் வழியாக இந்தியாவை நோக்கி வந்து மும்பை துறைமுகத்தை அடைந்தது. இந்த கச்சா எண்ணெய் கிழக்கு மும்பையின் மஹூல் பகுதியில் சுத்திகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 அன்று சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டு, மார்ச் 3 அன்று கப்பல் புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் பகுதியில் உள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு, மார்ச் 9 அன்று Automatic Identification System (AIS) அமைப்பை அணைத்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
கிரீஸின் ஏதேன்சில் உள்ள டைனாகோம் டாங்கர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த கப்பலில் இந்தியர் கேப்டனாக உள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் சேர்ந்த 28 பேர் மாலுமிகளாக பணியாற்றுகின்றனர். விரைவில் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




