அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனுமதி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடன் தொடர்ந்து மேற்கொண்ட தொடர்புகளுக்குப் பிறகு கிடைத்ததாக கூறப்படுகிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 20% நடைபெறும் முக்கிய கடல்வழிப்பாதை ஹார்முஸ் ஜலசந்தி. போர் சூழலில் அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ஈரான் அந்த வழித்தடத்தில் கட்டுப்பாடுகளை விதித்ததால், இந்திய கப்பல்கள் உட்பட பல நாடுகளின் கப்பல்கள் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பில் கவலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலும் பல மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. சென்னையில் பல உணவகங்கள் ஒருநாள் மூடப்பட்டதாகவும், சில ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறியதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், தேவையான கையிருப்பு இருப்பதால் நாட்டில் பெரிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் மூன்று முறை பேசியதாக தகவல். இருநாடுகளின் நட்புறவை அடிப்படையாகக் கொண்டு இந்திய கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் ‘புஷ்பாக்’ மற்றும் ‘பரிமால்’ என்ற இரண்டு இந்திய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்படவில்லை என்றும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தடையின்றி கிடைக்கும் சூழல் மேம்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.