புதுடில்லி: கடந்த சில நாட்களில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால், கடைசி உரையாடலில் கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி தொடர்பான விஷயங்கள் பேசப்பட்டதாக கூறினார். இதற்கு மேல் விவரம் தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானிலிருந்து ஆர்மினியா மற்றும் அஜர்பைஜான் வழியாக இந்தியா திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாகவும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடன் இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரானில் தற்போது அல்லது சமீபத்தில் 9,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்ததாக அமைச்சகம் கூறியது. இதில் மாணவர்கள், கடற்பணியாளர்கள், வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சில யாத்ரீகர்கள் அடங்குவர். மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், தெஹ்ரானில் இருந்த மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் ஈரானிலேயே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அஜர்பைஜான் மற்றும் ஆர்மினியா சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், தரைவழியாக எல்லைகளை கடக்க உதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. தரைவழியாக ஈரானை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தூதரகம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.




