ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்ததில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

தகவலின்படி, கிரேட்டர் கைலாஷ் பகுதியில் கட்சி பிரமுகர் ஒருவரின் வீட்டில் நடந்த திருமண விழாவில் பரூக் அப்துல்லாவுடன் ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து கட்சி நிர்வாகிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பரூக் அப்துல்லாவுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒரு வாகனத்தில் மறைந்திருந்த நிலையில், போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த கமல்சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டார். அவரிடமிருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மரண செய்தியைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் நடந்ததாகவும், சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு அதிகரித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.