மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இரண்டு கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள எதிர்ப்பு எழுந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் மற்றும் கருப்பணசாமி கோவில், சுமார் 2 ஏக்கர் 40 செண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கோவில்களின் திருப்பணிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியதாகவும், அதையடுத்து பணிகளை தொடங்க முயன்றபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

பரம்பரை அறங்காவலர் மகேஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பணியை தடுக்க சாகுல் ஹமீது என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ஜனவரியில் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிப்.18-ல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிராம மக்கள் கூறுகையில், கோவில் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட மசூதி இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருப்பணி செய்ய முயன்றபோது, கோவிலை சீரமைக்கக் கூடாது, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சிலர் கோவிலுக்குள் நுழைந்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தாலும், எதிர்ப்பால் திருப்பணி இன்னும் தொடங்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

இதனால், திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் வரை தொடர்ச்சியான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தடுப்பது அவமதிப்பாகும் எனக் கூறி, தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.