மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். எர்ணாகுளம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இத்தகைய அரசியலுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த நுணுக்கமான தருணத்தில் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் போக்கில் ஈடுபடுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்காசிய நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட பல இந்தியர்கள் பணியாற்றி வருவதை குறிப்பிட்ட மோடி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்றார். ஒரு இந்தியரையும் பாதுகாப்பற்ற நிலையில் விடமாட்டோம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.