புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாணவர் எளிதாக உள்ளே நுழைந்து, கவர்னரின் மகன் அறையில் தூங்கியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் கூறுகையில், மார்ச் 9 இரவு 10.45 மணியளவில் குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது கிரில் கேட்டை ஏறி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஹர்திக் ஷா மாளிகைக்குள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு வளையத்தில் உள்ள இடத்தில் இவ்வாறு நுழைந்தது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
சம்பவம் நடந்த அதே இரவு, பணியில் இருந்த ஐ.ஆர்.பி.என். போலீசார் மற்றும் ஊழியர்களை மாளிகையிலேயே வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முதல் மாடி வளாகத்தில் மாணவர் நடந்து சென்றதை ஒரு காவலர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த காவலர், மாணவர் ‘சிவப்பாக’ இருந்ததும் வட மாநில தோற்றமும் இருந்ததால் கவர்னர் கைலாஷ்நாத்தின் உறவினர் என நினைத்து சந்தேகிக்கவில்லை என்று தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த விளக்கம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அலட்சியமாக இருந்ததாக கருதப்பட்டவர்களை ஆயுதப்படைக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளதாகவும், மாணவர் ஏறி வந்த இரண்டாவது நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.




