புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட எரிசக்தி தொடர்பான முடிவுகளில், வேறு நாட்டின் தலைமையிடம் இந்தியா சார்ந்து இருக்க வேண்டுமா என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ஈரான் மீதான தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசிய அவர், மேற்கு ஆசியப் பகுதியில் போர் சூழல் உருவாகி இருப்பதாகவும், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இந்த மோதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.

உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20% நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வழியாக இந்தியாவுக்கு கணிசமான அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வருவதால், இந்தியா பெரிதும் பாதிக்கப்படும் என்றார்.

இதன் தாக்கம் ஏற்கெனவே தெரியத் தொடங்கியுள்ளதாகவும், உணவகங்கள் மூடப்பட்டதாகவும், எல்பிஜி விநியோகத்தைச் சுற்றி பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடக்கம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் அடித்தளமாக எரிசக்தி பாதுகாப்பு இருப்பதாக கூறிய ராகுல், யாரிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்க வேண்டும், எந்த நாடுகளுடன் உறவை பேண வேண்டும் என்பதைக் இந்தியா தன்னிச்சையாக முடிவு செய்ய வேண்டும் என்றார்.