பா.ம.க. நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் அங்கீகாரம் ரத்து ஆனதற்கு அன்புமணி ராமதாஸின் “சரியான செயல்பாடு இல்லாமை” காரணம் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அன்புமணி கட்சி உறுப்பினர் கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. சின்னம் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம். தர்மபிரபு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராமதாஸ் தரப்பில் 18 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அன்புமணி கேள்வி எழுப்ப முடியாது என்றும், அந்த திருத்தங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினராக இல்லாதவர் இதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், அன்புமணி தாக்கல் செய்த தள்ளுபடி மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என்றும், உண்மைக்கு மாறான பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பும் வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 13-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.