சி.பி.எஸ்.இ. 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்கள்” என்ற தலைப்பில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரித்த மூன்று பேராசிரியர்கள், இனி வருங்காலங்களில் பாடத்திட்டம் அல்லது பாடப்புத்தக தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பாடம் என்.சி.இ.ஆர்.டி. மூலம் 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அதனால் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும் கூறப்படுகிறது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பன்சோலி) இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
நேற்றைய விசாரணையில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பல கேள்விகளை எழுப்புவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். உரிய ஒப்புதல் இல்லாமல் பாடம் சேர்க்கப்பட்டதா, இது “சாதாரண நடைமுறை” என எப்படி கருத முடியும், உயர்நிலை அதிகாரிகளின் அனுமதி இன்றி பாடம் இடம் பெற்றதா என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
மேலும், மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகர், அலோக் பிரசன்ன குமார் ஆகிய மூவரும் அடுத்த தலைமுறைக்கான பாடப்புத்தகங்களை தயாரிக்க தகுதியற்றவர்கள் எனக் கூறி, இனி அவர்களை பாடத்திட்டம்/பாடப்புத்தக தயாரிப்பில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டது. மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது; அரசு நிதியுதவி பெறும் கல்விப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதித்துறை தொடர்பான பாடங்களை சேர்க்கும் போது, ஓய்வு பெற்ற நீதிபதி, பிரபல வழக்கறிஞர், மூத்த கல்வியாளர் அடங்கிய குழுவின் ஆலோசனையையும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசனையையும் பெற்று என்.சி.இ.ஆர்.டி. செயல்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. நீதித்துறை சார்ந்த பாடத்திட்டத்தை இறுதி செய்ய துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டது.




