எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக உருவாகியுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக முதல்வர் கூறினார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்புத் தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுக்கும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பார்லிமென்ட் வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முதல்வர் தெரிவித்தார். போதுமான கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என்றும், மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்ள மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.




