மாநிலத்தின் வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முன்னேற்றம் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிக்கையில், “திராவிட மாடல்” ஆட்சியில் 2 டைடல் பூங்காக்களும் 16 நியோ டைடல் பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கணினித் துறையில் தமிழகம் உயர்ந்திட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையில் டைடல் பூங்காக்கள் உருவானதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 2016–2021 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா விரைவாக முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதாக கூறிய முதல்வர், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் நியோ டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளன என்றார்.

இதற்கு மேலாக, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் டைடல் பூங்காக்களுக்கும், திருவண்ணாமலை, ராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் நியோ டைடல் பூங்காக்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.