தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே நடந்த சம்பவம் தொடர்பாக, திருநறையூரை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மக்கள் தொடர்பாளராக கூறப்படும் ஆதித்யன் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், மார்ச் 10 அன்று திருநறையூர் வள்ளுவர் தெருவில் ஒன்பது பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்து, புத்தகங்களை வழங்கி, சர்ச்சுக்கு வருமாறு அழைத்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஆதித்யன் அந்த குழுவை தடுத்து நிறுத்தி, தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, நடந்ததை வீடியோவாக பதிவு செய்ததாகவும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

திருவிடைமருதூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், மத உணர்வை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, திருநறையூர் வி.ஏ.ஓ. ஜோதிநாயகம் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆதித்யன் கைது செய்யப்பட்டார். பின்னர் இரவில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்தி அறிந்ததும், திருநறையூர் மக்கள், ஹிந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் டி.எஸ்.பி. அலுவலகம் முன் திரண்டனர்.