தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளை அமைப்பதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பள்ளிகள் பின்பற்றும் மொழிக் கட்டமைப்பு, தமிழகத்தின் இருமொழி கொள்கைக்கு முரணாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அரசு கூறியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளி அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

பிரமாணப் பத்திரத்தில், நவோதயா பள்ளிகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மொழி கொள்கையின் கீழ் செயல்படுகின்றன என அரசு குறிப்பிட்டது. இது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இருமொழி கொள்கைக்கு எதிரானதால், அந்த பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

மேலும், தமிழகத்தில் உறைவிட வசதியுடன் 38 அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும், அனைத்து தரப்பினரும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகின்றது என்றும் அரசு சுட்டிக்காட்டியது.

2024–25 கல்வியாண்டில் மட்டும் இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகவும், பலர் அரசின் முழு உதவித்தொகையுடன் சர்வதேச கல்வி நிறுவனங்களில் பயின்றுவருவதாகவும் கூறப்பட்டது. கூடுதலாக கல்வி நிறுவனங்களைத் திறப்பதைவிட மத்திய அரசு தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதை செய்யாமல் விரிவாக்கம் செய்வது நிதிச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.