தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; சுமார் 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என மாநில தலைவர் முரளி வேண்டுகோள் விடுத்தார்.
ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மட்டுமே டீசலை கேன்களில் வாங்குவது போதுமானது என்றும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குவித்து வைத்தால் செயற்கையான தட்டுப்பாடு உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எந்த பெட்ரோல் பங்க்கிலும் வழக்கம்போல் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என அவர் கூறினார். 2013-14 காலத்தில் சுமார் 4,000 பங்க்குகள் இருந்த நிலையில், தற்போது சுமார் 7,000 பங்க்குகள் உள்ளதால் விநியோகம் சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தை நிறுத்துமாறு ஆயில் நிறுவனங்கள் உத்தரவிட்டதாக வந்த செய்திகளால், அடுத்து பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு வரும் என மக்கள் நினைத்து பங்க்குகளுக்கு செல்வதாக அவர் கூறினார். இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தாலும், இது தேவையற்றது என்றும், மத்திய அரசு விலை உயர்வு இருக்காது என்று அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மத்திய அரசிடம் 90 நாட்களுக்கு கையிருப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் 14 எரிபொருள் நிலையங்கள் (டெர்மினல்கள்) உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சென்னை உள்ள ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது தட்டுப்பாடு இல்லை, தேவையெனில் முன்கூட்டியே டேங்கர்கள் அனுப்பப்படும், எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.




