பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தும் நோக்கில் 2023 செப்டம்பரில் நாரி சக்தி வந்தன் ஆதினியம் என்ற பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய விதிமுறைகளின்படி இந்த இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வராது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின் தொகுதி மறுவரையறை நடைபெற வேண்டும்; அதன் பின்னர் சட்டமன்றங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த தாமதத்தைத் தவிர்க்க, எல்லை நிர்ணய செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ள பெண்கள் இடஒதுக்கீட்டு அமலாக்கத்தை சட்டத் திருத்தம் மூலம் பிரிக்கும் வழியை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால், தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல் பெண்கள் இடஒதுக்கீட்டை 2029க்கு முன்பாகவே அமல்படுத்த வாய்ப்பு உருவாகும். இதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது.