புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இடையே வெளிநாட்டு கொள்கை, சித்தாந்தம் தொடர்பான கருத்து மோதல் கடிதங்கள் வழியாக வெளிப்படையாக உருவெடுத்துள்ளது.

ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா இடையிலான பதற்றம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் தரூர் தெரிவித்த கருத்துகளை விமர்சித்து தான் கடிதம் எழுதியதாக அய்யர் கூறினார். அதில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தரூருக்கு வாக்களித்ததாகவும், அவர் தோல்வியடைந்த பின்னரும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தரூருக்கு “மரியாதையான இடம்” வழங்க வேண்டும் என்றும், போட்டியிடும் அவரது ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும் என்றும் வாதிட்டதாகவும் குறிப்பிட்டார்.

அந்த ஆதரவின் தொடர்ச்சியாகவே சோனியா குடும்பத்தினரும் கார்கேவும் தன்னை சந்திக்க மறுத்ததாக அய்யர் குற்றம்சாட்டினார்; தற்போது அந்த ஆதரவுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவை விமர்சிப்பதில் ஜெய்சங்கர் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக தரூர் கூறியதுடன் தாம் ஒத்துப்போகவில்லை என்றும், பார்லிமென்ட் நிலைக்குழு தலைவராக உள்ள தரூர் வெளிநாட்டு கொள்கை குறித்து தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பது அந்தப் பதவியின் மதிப்பை குறைக்கும் என்றும் கூறினார்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவு விவகாரத்தில் தரூரின் நிலைப்பாடு அவரது சித்தாந்தம் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் அய்யர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த தரூர், வலிமையான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றும், சர்வதேச விவகாரங்களில் தன் கருத்துகள் இந்திய நலனை மையமாகக் கொண்ட தெளிவான தேசியவாதக் கண்ணோட்டத்தில் இருப்பதாகவும் கூறினார். பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு செயல்படுவது தார்மீக சரணடைவு அல்ல; அது பொறுப்பான நிர்வாகம் என்றும் தெரிவித்தார். “ஆப்பரேஷன் சிந்தூர்” குறித்து வெளிநாடுகளில் விளக்க அனைத்துக் கட்சிக் குழுவில் பங்கேற்றது தனிப்பட்ட முறையில் மேற்கொண்டதாகவும், சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையே ஆதரித்ததாகவும் கூறினார். மேலும், கடந்த காலங்களில் அய்யரை ஆதரித்ததாகவும், அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது நிலைமை தலைகீழாக மாறியதில் தமக்கு வருத்தமில்லை என்றும் தரூர் குறிப்பிட்டார்.