சென்னை: தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான விவகாரங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை திமுக அரசு வெளியிட்டதாக குறிப்பிட்டார்.
ஆனால் அந்தத் தகவல்களில் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக கூறிய அவர், 2021 ஆண்டுக்கான கொலை வழக்குகளின் எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். 2021-ல் NCRB வெளியிட்ட தரவின்படி தமிழகத்தில் 1,686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், உள்துறை செயலாளர் 1,597 என குறைத்து கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தேசிய அளவில் வெளியான புள்ளிவிவரங்களிலேயே இவ்வாறு மாற்றம் காட்டப்படும்போது, இன்னும் சமர்ப்பிக்கப்படாத 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதல்வர் அதிகாரிகளை முன்னிலைப்படுத்தாமல், தானே பதில் சொல்ல வேண்டும் என்றும், நேர்மையான விளக்கம் அளிப்பது முதல்வரின் பொறுப்பு என்றும் அண்ணாமலை கூறினார்.




