புதுடில்லி: உடல் பருமன் மற்றும் தொடர்புடைய பிரச்னைகளுக்காக மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்படும் மருந்துகளை மறைமுகமாக விளம்பரப்படுத்தும் முயற்சிகளை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடல் பருமன், அதிக கொழுப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்றவற்றுக்கான மருந்துகளை ‘விழிப்புணர்வு பிரசாரம்’ என்ற பெயரில் சில நிறுவனங்கள் மறைமுகமாக பிரசாரம் செய்ததாக புகார்கள் டி.சி.ஜி.ஐ.-க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், டி.சி.ஜி.ஐ. இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, மருந்து நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்த அனுமதி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்ட விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார். அச்சு, மின்னணு, இணையம், சமூக வலைதளம் உள்ளிட்ட எந்த தளத்திலும் மருத்துவர் பரிந்துரை மருந்துகளை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
மேலும், மருந்தின் பெயர் பொதுமக்களின் நினைவில் நிலைத்திருக்குமாறு செய்யப்படும் மறைமுக நடவடிக்கைகளும் விதிமீறலாகக் கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை கண்காணித்து தடுக்கும் வகையில் ‘ஆபத்து மேலாண்மை திட்டம்’ என்ற விரிவான திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் பருமனுக்கு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட முழுமையான சிகிச்சை முறைகள் தேவைப்படும் நிலையில், மருந்து மட்டும் தீர்வாகும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் எந்தவித விளம்பரமும் செய்யக் கூடாது என டி.சி.ஜி.ஐ. வலியுறுத்தியுள்ளது.




