தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மறுபரிசீலனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வசமுள்ள 17 ‘சிட்டிங்’ தொகுதிகளில் 7 இடங்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாக ஒரு சர்வே முடிவு சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டு வென்றதால், தற்போது காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை ஆய்வு செய்து தமிழக காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு பட்டியல் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே நேரத்தில், ஆளும் கட்சி ஆதரவு நிறுவனமொன்று எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு, வளர்ச்சி பணிகள், கூட்டணி ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து சர்வே எடுத்ததாக தகவல்.
அந்த சர்வேயில் ஊட்டி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 7 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கருத்துகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்குவது குறித்து தி.மு.க. மறுபரிசீலனை செய்து, சவாலான இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொகுதி தேர்வில் தங்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக சில முன்னாள் தலைவர்கள் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோஷ்டி தலைவர்களின் பரிந்துரைகளையும் பரிசீலிக்க வேண்டும் என மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கருக்கு டில்லி மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல். இதற்கிடையில், குறைந்தபட்சம் 10 ‘சிட்டிங்’ தொகுதிகளை தக்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




