சட்டசபை தேர்தல் காலத்தில் உரிய ஆவணமின்றி பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை ESMS செயலியில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கண்காணிப்பு குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படை, நிலைகண்காணிப்பு குழு மற்றும் வீடியோ பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் வருவாய் உள்ளிட்ட அரசுத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இடம்பெற்றுள்ளனர்.

நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-ஐ மீறும் பணம் அல்லது பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் விவரங்களை உடனடியாக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், கடந்த தேர்தலிலும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டாலும் நெட்வொர்க் சிக்கலால் செயலியில் பதிவு செய்யாமல் கருவூலங்களுக்கு நேரடியாக ஒப்படைத்த நிலை இருந்ததாக தெரிவித்தனர். வரும் தேர்தலுக்காக செயலி ஆஃப்லைனிலும் இயங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதால், பறிமுதல் விவரங்களை தாமதமின்றி பதிவு செய்ய குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.