சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை (ED) முடக்கியுள்ளது.
பல வங்கிகளில் இருந்து பெரும் தொகை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சொத்துகள் இந்த நடவடிக்கையில் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான வங்கி கடன் மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு தொடர்புடைய ரூ.15,729 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.




