நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று (மார்ச் 13) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த போது குறுகிய காலத்தில் கவனம் பெற்றவர். அவர் 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டதுடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும் போட்டியிட்டார்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். பின்னர் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் அவரை இணைக்க பேச்சு நடத்தியதாகவும், ஆனால் அவர் ஓராண்டுக்கும் மேலாக எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், இந்த இடைப்பட்ட காலத்தில் “மக்கள் அரசியலில்” இருந்ததாகவும், வரவிருக்கும் தேர்தலிலிருந்து தனது அரசியல் பயணம் மீண்டும் தொடரும் என்றும் கூறினார். அதிமுக தலைமையும், கட்சிக்குள் ஜனநாயக சூழலும் தன்னை ஈர்த்த முக்கிய காரணங்கள் எனவும் விளக்கினார்.
மேலும் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை சுட்டிக்காட்டி மக்கள் தினமும் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய, மீண்டும் தவறு செய்ய அச்சம் ஏற்படும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





