பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பு விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
கேசி-135 ரக விமானம், ஒரு போர் விமானத்துக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் இருந்தபோது தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்தில் மொத்தம் 6 பேர் இருந்தனர்.
தொடர்ந்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 2 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தவில்லை என அமெரிக்க ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட போர் விமானம் குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடைபெறும் போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்துடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஐ கடந்துள்ளதாக செய்தி குறிப்பிடுகிறது.




