டெஹ்ரான்: அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழான தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக போர் நடத்தி வருவதாகவும், அது இரு வாரங்களை நெருங்கியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. மேலும், வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) புதிய தலைவராக பொறுப்பேற்றதாகவும் தெரிவிக்கிறது.
அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கும் கடுமையான காயம் ஏற்பட்டதாக அந்த நாளிதழ் கூறுகிறது. தாக்குதலில் ஒரு காலை இழந்ததுடன், வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜபர்காந்தி (மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்) சிகிச்சையை மேற்பார்வை செய்கிறார் எனவும் அந்த செய்தி கூறுகிறது. மொஜ்தபா தலைவராக பொறுப்பேற்ற பின் வெளியான முதல் அறிக்கையை அவர் நேரடியாக வாசிக்காமல், செய்தி வாசிப்பாளர் மூலம் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டதாகவும், இதனால் உலக நாடுகளில் சந்தேகம் எழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஈரானில் இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள கடும் பாதுகாப்பு காரணமாக இந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தி சன் தெரிவித்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.




