சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) கட்சிகள் சார்பில் மார்ச் 17ல் மாவட்டத் தலைமையகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், மக்கள் விரோதச் செயல்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

அறிவிப்பின்படி, அனைத்து வருவாய் மாவட்டத் தலைமையகங்களிலும் மார்ச் 17 காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதற்கிடையில், இதே கோரிக்கையை முன்வைத்து தமிழக பா.ஜ.க.வும் மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி, மார்ச் 15 மாலை 4 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.