ஈரானின் புதிய ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் உயிருக்கு “உத்தரவாதம் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரிக்கும் சூழலில் கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஜெருசலேமில் பேசிய நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும், இஸ்ரேல் எப்போதையும் விட வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.
ஈரான் மக்கள் “கொடுங்கோல் ஆட்சியை” அகற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் மற்றும் பாசிஜ் படைகள் மீது தெருக்களிலும் சோதனைச் சாவடிகளிலும் பலத்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும், நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறுகின்றன என்றும் கூறினார்.
ஈரான் மக்கள் சுதந்திரம் நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்குகிறது; இஸ்ரேல் உங்கள் பக்கம் நிற்கிறது, உதவுகிறது; ஆனால் இறுதி முடிவு உங்கள் கைகளில்தான் உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், அமெரிக்காவுடன் முன்னெப்போதும் இல்லாத கூட்டணி உருவாகியுள்ளதாகவும், அதிபர் டிரம்பை இஸ்ரேலின் சிறந்த நண்பர் மற்றும் தனது தனிப்பட்ட நண்பர் என்றும் குறிப்பிட்டார். தாங்கள் ஏறக்குறைய தினமும் பேசிக்கொண்டு கருத்துகள், ஆலோசனைகள் பரிமாறி இணைந்து முடிவுகள் எடுக்கிறோம் என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.




