லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த நாள் சபையில் அவர் கடுமையான கருத்துகளை பதிவு செய்தார்.

சபையை வழிநடத்திய ஓம் பிர்லா, “எதிர்க்கட்சித் தலைவர் சபையை விட மேலானவர் அல்ல” என்றும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் யாரும் விருப்பம்போல் பேச முடியாது என்றும் கூறினார். லோக்சபா தன் விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது; பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களும் பேசுவதற்கு முன் விதிகளின்படி நோட்டீஸ் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், உறுப்பினர்களின் மைக்ரோபோன்களை சபாநாயகர் கட்டுப்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். சபாநாயகர் இருக்கையில் மைக்ரோபோன் இயக்க/நிறுத்த சுவிட்ச் இல்லை என்றும், பேச அனுமதி பெற்ற உறுப்பினரின் மைக்ரோபோன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்றும் விளக்கினார்.

ஒவ்வொரு எம்.பி.யும் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்குள் இருந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கச் செய்வதற்காக தொடர்ந்து முயற்சிப்பதாகவும், தன் நடவடிக்கைகள் பாரபட்சமற்றவை என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது வேதனை அளித்தாலும், விதிமீறல்கள் நடந்தால் ஒழுக்கத்தை பேண இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் எனவும், அரசியலமைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.