2025–26 மண்டல–மகரவிளக்கு சீசனில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள், லஞ்சம் மற்றும் முறைகேடுகள் மூலம் பெற்றதாக கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாயை தங்களின் வங்கி கணக்குகள் வழியாக பரிமாற்றம் செய்ததாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் தனலட்சுமி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகள் உள்ளதாகவும், கோவில் பணியாளர்கள் இவ்வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. கோவிலில் தங்கம் கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு, சபரிமலையில் நடந்ததாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஊழியர்கள், பூசாரிகள் மற்றும் உதவி பூசாரிகள் உள்ளிட்டோர் கண்காணிப்பில் இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்காமல் இருக்க பணத்தை கையில் வைத்திருக்காமல், அவ்வப்போது பலரது கணக்குகளுக்கு வங்கி வழியாக அனுப்பியதாக அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் படி, கடந்த சீசனில் மட்டும் எஸ்.பி.ஐ. வழியாக 1,667 பரிவர்த்தனைகளில் ரூ.8.08 கோடி அனுப்பப்பட்டதாகவும், தனலட்சுமி வங்கியில் 942 பரிமாற்றங்களில் ரூ.11.45 கோடி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் சாந்தி, பிற பூசாரிகள், தினக்கூலி பணியாளர்கள், குத்தகைதாரர்கள் உள்ளிட்டோருடன் தொடர்புடைய 18 கணக்குகளில் இந்த பரிமாற்றங்கள் நடந்ததாகவும், தபால் நிலையம் மூலம் ரூ.14.08 லட்சம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் தரிசனத்திற்கு உதவி செய்து பணம் பெறுவது, சிலர் நெய் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுவது, தினக்கூலி பணியாளர்கள் லாட்டரி விற்பனை செய்ததாக கூறப்படுவது போன்ற குற்றச்சாட்டுகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேவைக்கு அதிகமாக தினக்கூலி பணியாளர்களை நியமிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் தினக்கூலி நியமனம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றம் நியமித்த தனி அதிகாரி இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.