2023-ல் கொண்டுவரப்பட்ட ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்’ மக்களின் தனியுரிமையை பாதிக்கக்கூடும் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பத்திரிகையாளர் கீதா சேஷு உள்ளிட்டோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தச் சட்டம் தனியுரிமை என்ற அடிப்படை உரிமையை நீர்த்துப்போகச் செய்கிறது என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தாக்கத்தையும் குறைக்கிறது என்றும் வாதிட்டார்.
மேலும், தரவு பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது வாரியத்தின் சுயாதீன செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘பொது நலன்’ என்ற பெயரில் அரசு தகவல்களை சேகரிக்கலாம் என்ற விதிமுறையில் தெளிவான வரையறை இல்லாததால், யாரிடமிருந்தும் எந்த தரவையும் அவர்களுக்கு தெரியாமலேயே பெறும் சூழல் உருவாகலாம் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
புதிய சட்டத்தின் சில ஷரத்துகளால் வெளிநாடுகளில் இருந்துகூட இந்திய தரவுகளை கையாளும் நிலை ஏற்படலாம்; இது இறையாண்மை தொடர்பான பிரச்சினை என்பதால் உடனடி தலையீடு தேவை என்றும் மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘தனிநபர் தரவு’ மற்றும் ‘பொது தரவு’ என்ற வேறுபாடு உள்ளிட்ட பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன என்றும், அரசு அலுவலராக இருக்கும் ஒருவரைச் சார்ந்த தரவை எவ்வாறு வகைப்படுத்துவது போன்ற அம்சங்களும் பரிசீலிக்க வேண்டியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டனர். தனியுரிமை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, விரிவான விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர்.




