ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு வழங்குவது பாகுபாடு என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் இதே காப்பீடு வசதி கிடைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ராதா யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ஆன்லைன் டிக்கெட் பயணிகளுக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படுவதால், கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான பயணிகள் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள் எனக் கூறி, இதை சரிசெய்ய உத்தரவு கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் அசானுதின் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ரயில்வே துறை எந்த சாதகமான முடிவையும் தெரிவிக்கவில்லை என அமர்வுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து வெளியான உத்தரவில், டிக்கெட் ஆன்லைனிலா அல்லது கவுன்ட்டரிலா வாங்கப்படுகிறது என்பதின் அடிப்படையில் வேறுபாடு காட்ட முடியாது; பயணக் காப்பீடு சிலருக்கு மட்டும் இருக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியது. கவுன்ட்டர் டிக்கெட் பயணிகளுக்கும் காப்பீடு வசதி கிடைப்பதை ரயில்வே உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
காப்பீட்டு கட்டணத்தை கவுன்ட்டரில் வசூலிப்பது, விவரங்களை பதிவு செய்வது போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன என்ற ரயில்வே வாதத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. நவீன காலத்தில் இது பெரிய தடையாக இருக்க முடியாது என்றும், பயணிகள் ரயில்வேயை நம்பி பயணம் செய்வதால் விபத்து காப்பீடு முதல் பாதுகாப்பான பயணம் வரை பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கே எனவும் அமர்வு குறிப்பிட்டது.




