நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை நேதாஜியின் கொள்ளுப் பேரன்களில் ஒருவராக குறிப்பிடப்படும் ஆஷிஷ் ராய் தாக்கல் செய்திருந்தார். ஜப்பானில் உள்ள ரென்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவரின் அஸ்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவது பொருத்தமானது என வாதிட்டார்.
விசாரணையின் போது, அஸ்தி தற்போது எங்கு உள்ளது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சிங்வி, ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் அஸ்தி இருப்பதாகவும், ஜப்பான் செல்லும் பல மூத்த இந்திய தலைவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, நேதாஜியின் தியாகத்திற்கு நீதிமன்றம் தலை வணங்குவதாக கூறிய அமர்வு, இந்த மனுவை நேதாஜி குடும்பத்தினர் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்களா என கேள்வி எழுப்பியது. தேவையெனில் குடும்பத்தினர் நேரடியாக மனு தாக்கல் செய்யலாம் என்றும், இதே போன்ற மனு 2024ல் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு, தற்போதைய மனுவை விசாரிக்க முடியாது என கூறி தள்ளுபடி செய்தது.




