ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் செயலிகளை விளம்பரப்படுத்திய 124 சமூக வலைதள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய செயலிகளை பயன்படுத்துவதும் அவற்றை விளம்பரப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வெளியான விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்தில், பல்வேறு தளங்களைச் சேர்ந்த இந்தக் கணக்குகள் 500-க்கும் மேற்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டிருந்தன. வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம், உறுதியான வருமானம், போனஸ், பரிந்துரை கமிஷன் போன்ற கவர்ச்சிகர வாக்குறுதிகள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.
இவ்விளம்பரங்கள் குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு கணக்குகள் குறித்த தகவல் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவை நீக்கப்பட்டன.
இந்தக் கணக்குகளை இயக்கியவர்கள் யார் என்பதையும், அதனுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனை வழிகளையும் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




