தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் உள்துறை செயலர் தீரஜ்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருடன் அவர் பேசினார். 2021ல் 1,597 ஆக இருந்த கொலைகள் 2024ல் 1,490 ஆகவும், 2025ல் 1,461 ஆகவும் குறைந்துள்ளதாக அவர் கூறினார். பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2021ல் 422 இருந்து கடந்த ஆண்டு 401 ஆக குறைந்ததாகவும் தெரிவித்தார்.

காவல் மரணங்களை அரசு சகிப்பதில்லை என்றும், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தீரஜ்குமார் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உடனடி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் காரணமாக சட்டம்-ஒழுங்கு பாதிக்கிறது என சிலர் கட்டமைக்க முயல்வதாக கூறி, அது தவறானது என்றார். பொறுப்பு டி.ஜி.பி.க்கு டி.ஜி.பி.க்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் அவர் விளக்கினார். போதைப் பொருட்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணமா இல்லையா என்ற விவாதத்தை தேவையற்றதாகவும் குறிப்பிட்டார்.

பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமன், அரசின் விழிப்புணர்வு காரணமாக போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குழந்தைகள் புகார் அளிக்க முன்வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன் இது குறைவாக இருந்ததாகவும் கூறினார். ஜாதிப் பெயரை பயன்படுத்தினாலே எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். துாத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடைபெறுவதால் விரிவாக பேச முடியாது என்றார். தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள், கொலைகள் மற்றும் ஜாதி பின்னணியில் வீடியோக்கள் வெளியிடுபவர்களை சமூக வலைதளங்களில் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.