கான்பெரா: பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு “முற்றிலும் தவறானது” என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.

இந்தியா நடத்தும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாடான ‘ரைசினா டயலாக்’ குறித்து வெளியிட்ட அறிக்கையில், 2016 முதல் டில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ், சீனாவின் போவாவ் மாநாடுகளை விட சிறந்ததாக அவர் குறிப்பிட்டார். மாநாட்டில் அரசியல் ரீதியாக பலம் படைத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை; அதேபோல், நடத்தும் அரசை புகழ்ந்து பாடும் மேடையாகவும் இது மாறுவதில்லை என்றார்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காட்டும் அணுகுமுறையையும் அபாட் பாராட்டினார். தொடக்க அமர்வில் கலந்து கொண்டு முதன்மை உரையை கேட்பதோடு, அவர் பேசாமல் இருப்பது ஒரு முன்மாதிரி எனக் கூறினார். உலகின் மிகச் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக இருக்கக்கூடிய நிலையிலும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் பண்பு அவரிடம் இருப்பதாகவும், பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக்குப் பிறகும் அதிகார மமதை தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

‘சர்வாதிகார’ என்ற முத்திரையை மறுத்த அபாட், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள், துடிப்பான ஊடகங்கள், வலுவான சுயாதீன நீதித்துறை ஆகியவை உள்ள நாட்டை சர்வாதிகாரமாக கூற முடியாது என்றார். மேலும், விவாதத்திற்கு தடையில்லாத மாநாட்டை சர்வாதிகார நாடு நடத்தாது என்றும் கூறி, இந்த ஆண்டு மாநாட்டில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் மற்றும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தங்களது கருத்துகளை பதிவு செய்ததை உதாரணமாக சுட்டினார்.