இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகள் குறித்து, அமெரிக்க அரசு ‘முறையற்ற வர்த்தக நடைமுறை’ என்ற குற்றச்சாட்டுடன் விசாரணையை தொடங்கியுள்ளது. தேவையை விட பல மடங்கு அதிக உற்பத்தி மூலம் சந்தையில் சமநிலை குலையக்கூடும் என்பதே அமெரிக்காவின் முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
இதற்கு முன், பிற நாடுகள் விதிக்கும் உயர்ந்த வரிகளுக்கு பதிலாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ‘பரஸ்பர வரி’ விதித்திருந்தார். அதற்காக 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரச் சட்டத்தை அவர் பயன்படுத்தினார். ஆனால், அந்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்து அதை ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, வர்த்தகச் சட்டத்தின் ‘செக்ஷன் 122’ ஐ பயன்படுத்தி அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கும் 10% கூடுதல் வரியை டிரம்ப் விதித்தார். இந்த பிரிவின் கீழ் 150 நாட்கள் வரை மட்டுமே இவ்வகை வரியை விதிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது ‘செக்ஷன் 301’ கீழ் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. தற்போதுள்ள 10% வரி காலாவதியான பிறகும் கூடுதல் வரி விதிப்பை தொடர இந்த வழிமுறை உதவக்கூடும் என கூறப்படுகிறது.
விசாரணையில் இந்தியாவின் சோலார் செல் உற்பத்தித் திறன் உள்நாட்டு தேவையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலக சந்தையில் அளவுக்கு அதிகமான ஏற்றுமதிக்கு வழிவகுக்கலாம் என்ற கவலையையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இதேபோல் ஸ்டீல், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் வாகன உற்பத்தித் துறைகளும் விசாரணையின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.




