வாஷிங்டன்: ஈரான் தொடர்பான மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், சந்தை நிலைமையை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அவசர கையிருப்பிலிருந்து 17.2 கோடி பேரல் கச்சா எண்ணெயை வெளியிட அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்புக்காக ‘ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்’ (SPR) திட்டம் செயல்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பாகக் கருதப்படுகிறது. இதில் மொத்தம் 71 கோடி பேரல்கள் வரை சேமிக்க முடியும்; தற்போது சுமார் 41 கோடி பேரல்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் அல்லது இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில் திடீர் விலை உயர்வையும் விநியோக தடையையும் கட்டுப்படுத்தி பொருளாதார பாதிப்பை குறைப்பதே இந்த கையிருப்பின் நோக்கமாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் தாக்கத்தை குறைக்க, அடுத்த வாரம் முதல் எண்ணெய் வெளியீடு தொடங்கி சுமார் 120 நாட்கள் நடைபெறும் என அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ்டோபர் ரைட் தெரிவித்தார்.