சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ‘சிம்’ இணைப்பு விதி மற்றும் கணினி/இணைய பதிப்பில் தானியங்கி வெளியேற்றம் (லாக் அவுட்) போன்ற மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 2025ஆம் ஆண்டில் மட்டும் ‘டிஜிட்டல் கைது’ போன்ற மோசடிகள் மூலம் மக்கள் 644 கோடி ரூபாய் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில், குற்றவாளிகள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் செயலிகளை இயக்கி, பின்னர் லாக்-இன் செய்த சிம் கார்டை கைவிட்டு விடுவது பொதுவான நடைமுறையாக கண்டறியப்பட்டது. பலர் வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால் அவர்களை கண்டறிதல் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தொலைத்தொடர்புத் துறை ‘சிம் பைண்டிங்’ விதியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த விதிப்படி எந்த சிம் எண்ணில் இருந்து பதிவு செய்யப்பட்டதோ, அதனுடன் செயலி இணைந்திருக்க வேண்டும். மொபைலில் இருந்து சிம்மை எடுத்துவிட்டால், வை-பை இருந்தாலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்படும். மேலும், கணினியில் பயன்படுத்தப்படும் இணைய பதிப்புகள் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக லாக் அவுட் ஆகி, மீண்டும் பயன்படுத்த மொபைலில் இருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த விதிகள் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் வெளிநாடு செல்லும் இந்திய பயணிகள் ரோமிங் சிம் பயன்படுத்தும் போது வாட்ஸ்அப்பை அணுக முடியாத நிலை ஏற்படலாம் என்றும், வேலைக்காக வெப் பதிப்பை பயன்படுத்துவோருக்கு அடிக்கடி லாக் அவுட் ஆகுவது பணிச்சூழலை பாதிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை இல்லாமல் விதிகள் கொண்டு வரப்பட்டதாக கூறி, நிறுவனங்கள் அரசுக்கு அறிக்கை அளித்த பின் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.