புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தி அல்லது திருத்தி டிக்கெட் கட்டணங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன.
ஆகாசா ஏர் நிறுவனம் மார்ச் 15 முதல் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் பயண தூரம் மற்றும் பயண நேரத்தைப் பொறுத்து டிக்கெட் விலை ரூ.199 முதல் ரூ.1,300 வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மார்ச் 15 நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாவும் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இண்டிகோவில் உள்நாட்டு டிக்கெட்டுகள் ரூ.425 வரை, வெளிநாட்டு பயண டிக்கெட்டுகள் ரூ.2,300 வரை உயர்த்தப்பட்டு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவில் உள்நாட்டு டிக்கெட்டுகள் ரூ.399 வரை, வெளிநாட்டு பயண டிக்கெட்டுகள் ரூ.18,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




