புதுடில்லி: பிளாஸ்டிக் தண்ணீர் கேன் போன்ற பாதுகாப்பற்ற பாத்திரங்களில் பெட்ரோல் வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்களில் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு இருப்பதாக தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்கப்பட்டதாக வந்த தகவல் கவனத்திற்கு வந்ததாகவும் கூறியது.

பெட்ரோல் உள்ளிட்ட எந்த எரிபொருளையும் தளர்வான அல்லது பொருத்தமில்லாத பாத்திரங்களில் வாங்கவோ, சேமிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. மேலும், எரிபொருள் வழங்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து பங்க்களுக்கும் டீலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.