ஈரானில் அமெரிக்க தாக்குதலில் பள்ளி மாணவியர் உயிரிழந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவசர மனிதநேய உதவியாக ரூ.1.84 கோடி வழங்க சீனா முடிவு செய்துள்ளதாக பீஜிங் தெரிவித்துள்ளது.
பிப். 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மினாப் நகரில் உள்ள பெண்கள் துவக்கப் பள்ளி மீது ஏவுகணை தாக்கியதில், 180 மாணவியர் வரை உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ராணுவ விசாரணையில், பழைய தகவல்களால் தவறுதலாக பள்ளி கட்டடம் குறிவைக்கப்பட்டதாக தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சீனா கண்டித்ததுடன், உயிரிழந்த மாணவியருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சீனா கடுமையாக கண்டிப்பதாகவும், பள்ளிகளை தாக்குவது சர்வதேச மனிதநேய சட்ட மீறலாகவும் மனிதாபிமானத்தின் அடிப்படை வரம்பை கடந்த செயலாகவும் கூறினார்.
இதனிடையே, சீன சிவில் செஞ்சிலுவை சங்கம் ஈரான் செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.1.84 கோடி அவசர உதவியை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி, உயிரிழந்த மாணவியரின் பெற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




