சென்னையில் மார்ச் 15 அன்று நடைபெற உள்ள ஹிந்து மக்கள் கட்சி–தமிழகம் சார்ந்த “தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு” நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி மற்றும் உள்ளரங்க நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக தனித்தனியாக அனுமதி கோரியபோது சென்னை மாநகர காவல்துறை மறுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரணி நடத்த வேண்டாம் எனக் கூறி, மாநாட்டை உள்ளரங்க நிகழ்ச்சியாக நடத்த அனுமதி அளித்துள்ளார்.

கட்சியின் தரப்பில், அரசியல் கட்சிகள் வழக்கமாக பேரணி நடத்தும் பாதையிலேயே அனுமதி கேட்டதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ பணிகள், அருகில் மருத்துவமனை இருப்பது போன்ற காரணங்களை முன்வைத்து அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே மைதானத்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறி, தங்களுக்கே மட்டும் அனுமதி மறுக்கப்படுவது நியாயமல்ல என அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார். மாநாடு ஹிந்து ஒற்றுமை மற்றும் வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், 1,000 தமிழறிஞர்கள் பங்கேற்கும் “தமிழரங்கம்” உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்ளிட்ட ஹிந்து சமுதாய தலைவர்கள் பங்கேற்பும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.