2018ஆம் ஆண்டு விமானப் பயணத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவை கைது செய்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற ‘இண்டிகோ’ விமானத்தில், அப்போது தமிழக பா.ஜ. தலைவராக இருந்த தமிழிசை பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த சோபியா, மத்திய பா.ஜ. ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழிசை விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர்; பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி SHRC-க்கு மனு அளித்தார்.
விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சோபியாவுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் SHRC பரிந்துரைத்தது. இதை எதிர்த்து அப்போதைய இன்ஸ்பெக்டர் திருமலை, எஸ்.ஐ. லதா, ஏ.டி.எஸ்.பி. பொன்ராமு, சிறப்பு பிரிவு சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜி.பாஸ்கரன், எஸ்.ஐ.க்கள் நம்பிராஜன் மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட ஆறு போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமீம் அகமது அடங்கிய அமர்வு, சட்டம்-ஒழுங்கை பேணும் போலீசார் சம்பவ இடத்தில் எடுக்கும் உடனடி முடிவுகளை குறை கூற முடியாது என்றும், குற்றச்சாட்டுகளின் உண்மை புலன் விசாரணையில்தான் தெரியவரும் என்றும் குறிப்பிட்டது. SHRC தன் வரம்பை மீறி இணையான விசாரணை நடத்தி முடிவுக்கு வர முடியாது எனக் கூறி, இழப்பீடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான SHRC உத்தரவுகளை நீதிமன்றம் ரத்து செய்தது.




