தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் தீர்மான நோட்டீஸ்களை நேற்று சமர்ப்பித்தது.

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளன. லோக்சபாவில் 130 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 63 எம்.பி.க்களும் நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் மத்தியிலுள்ள ஆளும் பா.ஜ.க.க்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) என்ற பெயரில் தகுதியான பல வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும் ‘இண்டி’ கூட்டணி குற்றஞ்சாட்டுகிறது.

டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. சில சுயேச்சை எம்.பி.க்களும் நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இரு சபைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், இந்த நோட்டீஸ் தோல்வியடையும் வாய்ப்பே அதிகம்; இருப்பினும், கமிஷனருக்கு நெருக்கடி உருவாக்கும் நோக்கில் இதை முன்வைத்ததாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.