புதுடில்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவுக்கு வர வேண்டிய எட்டு எல்பிஜி (சமையல் எரிவாயு) டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கின்றன. இதனால் அந்த முக்கிய கடல் பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கியமான வழித்தடமாகும்; உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த வழியாக செல்கிறது. இந்த பாதையை கடக்கும் கப்பல்களை ஈரான் தாக்குவதால் போக்குவரத்து முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் 60% முதல் 67% வரை இறக்குமதியை நம்பியே உள்ளது. சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் வழியாக வரும் விநியோகம் தடைபட்டால் நாட்டின் எல்பிஜி வழங்கல் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதையடுத்து, ஹார்முஸ் அருகே காத்திருக்கும் இந்தியாவுக்கான எட்டு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து இந்தியா-ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நமது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் நான்காவது முறையாக பேசி, எல்பிஜி கப்பல்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபடுகின்றன என அராக்சி குற்றம்சாட்டி, தற்காப்புக்காக சட்டப்பூர்வ வழிகளில் செயல்படுகிறோம் என்று கூறினார். மேலும் நெருக்கடியான சூழல்களில் பிரிக்ஸ் கூட்டமைப்பு பிராந்திய மற்றும் உலக அமைதிக்காக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




