வடகிழக்கு மாநிலங்கள் ஒருகாலத்தில் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு சத்தங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அவர் அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோக்ராஜ்ஹர் மாவட்டத்திற்கு அவர் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து குவஹாத்தியிலிருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரூ.4,750 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், “இரட்டை இன்ஜின் அரசு” கீழ் அசாம் புதிய அமைதி-வளர்ச்சி அத்தியாயத்தை எழுதுகிறது என அவர் கூறினார்.

மேலும், முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு உள்ளூர் பூர்வகுடி மக்களின் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாகவும், அதனால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வடகிழக்கில் வன்முறை நிலவிய காலம் கடந்துவிட்டதாகவும், இப்போது பகுதி தொடர்ந்து முன்னேறுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.