புதுடில்லி: காணாமல் போனோர், குறிப்பாக குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க ராஜஸ்தான், பீஹார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குழந்தை கடத்தல் அதிகரிப்பதாக உள்ள கவலைகள் பின்னணியில், காணாமல் போனோர் வழக்குகளில் விசாரணை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் நிலை குறித்து தாமாக முன்வந்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது. வழக்குகளில் மந்தநிலை இருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அது குறிப்பிட்டுள்ளது.
ஆணையத்தின் அறிக்கையின்படி, 2013 முதல் தற்போது வரை பீஹாரில் ஆண்டுதோறும் சுமார் 12,000 முதல் 14,000 பேர் வரை காணாமல் போனதாக கூறப்படுகிறது; இதில் பல வழக்குகள் குழந்தைகள் தொடர்பானவை. காணாமல் போன குழந்தைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆர்பி) தரவுகளை மேற்கோள் காட்டி, ஒடிஷா, பீஹார், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மனித கடத்தல் வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக ஆணையம் கூறியது. சிறுவர்கள் கடத்தல் வழக்குகளில் ஒடிஷா முதலிடத்திலும், பீஹார் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகவும்; சிறுமியர் கடத்தல் வழக்குகளில் ராஜஸ்தானில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
காணாமல் போன குழந்தைகள் பிச்சை எடுப்பது, குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் தள்ளப்படலாம் என்ற சந்தேகம் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. இது மனித உரிமை மீறல் எனக் கூறிய ஆணையம், ஐந்து மாநிலங்களின் தலைமை செயலர்கள் மற்றும் காவல் துறை டிஜிபிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களில் பதிலளிக்க கேட்டுள்ளது.




