ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் தலிபான் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை விடியற்காலை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூல், கந்தஹார், பக்டியா உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஆப்கானுடன் நேரடி போர் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதல்கள் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினரையும், தலிபானின் ராணுவ தலைமையகங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளையும் குறிவைத்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான் அரசு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக குற்றம்சாட்டி, அதனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் தலிபான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்து, தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி, தக்க பதிலடி அளிக்கப்படும் என எச்சரித்துள்ளது.




