வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி ஆளும் என்.டி.ஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடவும், பா.ஜ.க. தலைமையிலான அணிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்துடன் அரசின் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் என்.ஆர். காங்கிரஸ்–பா.ஜ.க. கூட்டணி தொடரும் என உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தொகுதி பங்கீடு குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மான்சுக் மாண்டவியா புதுச்சேரி வந்து முதலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக பேசினார். தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ்–பா.ஜ.க. இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ.க. தரப்பில் மான்சுக் மாண்டவியா மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு, பா.ஜ.க. பங்கில் வரும் 14 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என சுரானா தெரிவித்தார்.

மேலும், கடந்த தேர்தலில் இருந்த நடைமுறையே இம்முறையும் தொடரும் என்றும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். அ.தி.மு.க.க்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் பேசவில்லை என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் முழு விவரமும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.